விருப்ப ஓய்வு பெற்ற சந்தோஷ்பாபு ஐஏஎஸ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருக்கு உடனடியாக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வுபெறுவதாக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது விருப்ப ஓய்வை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
பணி ஓய்வு பெறுவதற்கு 8 ஆண்டுகள் இருந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றது விவாதங்களை ஏற்படுத்தியது. 2441 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இணைய வசதி திட்டம் தொடர்பான டெண்டரை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அளிக்க ஆளும் தரப்பு அளித்த அழுத்தத்தின் காரணமாகவே சந்தோஷ் பாபு விஆர்எஸ் கேட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சந்தோஷ் பாபு, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு உடனடியாக தலைமை அலுவலக பொதுச் செயலாளர் பதவியை கமல்ஹாசன் வழங்கினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சந்தோஷ் பாபு, “முதுகுவலியுடன் சென்று மத்திய அரசிடம் பலமுறை பேசி பாரத் நெட் திட்டத்தை கொண்டுவந்தேன். அது அமல்படுத்தப்பட்டால் குக்கிராமங்களுக்குக் கூட இணைய வசதி சென்று சேரும்.
தமிழக அரசின் அழுத்தம் காரணமாகவே பதவியை விட்டு வெளியேறினேன். தொழில்நுட்பம் மூலமாக அரசில் மாற்றங்களை கொண்டுவர முடியும்” என்று தெரிவித்தார்.
ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை பாஜகவில் இணைந்து மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றார். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் மத்திய அரசுக்கு எதிராக விருப்ப ஓய்வு பெற்று, அண்மையில் காங்கிரஸில் இணைந்தார். அந்த வரிசையில் மற்றொரு குடிமைப் பணி அதிகாரியான சந்தோஷ் பாபு தற்போது மக்கள் நீதிமய்யத்தில் இணைந்துள்ளார்.