Advertisement Contact

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா அணி

தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா...மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.

மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் 4 ஆட்டங்களில் இருஅணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்றிருந்ததால் கடைசி ஆட்டம் இறுதி ஆட்டமாக அமைந்தது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக குயின்டன் டி காக்குடன் களமிறங்கிய கேப்டன் பவுமா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, டி காக் மற்றும் எய்டன் மார்கிரம் அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 128 ரன்கள் சேர்த்தது. முதலில் டி காக் 42 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மார்கிரம் 48 பந்துகளில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வாண்டர் டுசன் 1 ரன்னுக்கு டுவைன் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 18 ரன்களும், முல்டர் 9 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிடெல் எட்வர்ட்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிராவோ மற்றும் மெக்காய் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

169 ரன்கள் என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க ஆட்டக்காரர்களாக லெண்டில் சிம்மன்ஸ் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். சிம்மன்ஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். லீவிஸ் மட்டும் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார். அவர் 34 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறினர். ஓரளவு ரன் சேர்த்தவர்களாலும் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்த மேற்கிந்தியத் தீவுகள் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி என்கிடி 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜார்ஜ் லிண்டே மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் வென்றது.

ஆட்டநாயகன் விருதை மார்கிரமும், தொடர்நாயகன் விருதை ஷம்ஸியும் வென்றனர்.