Advertisement Contact

லாட்டரி சீட்டு விவகாரத்தில் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி

கற்பனையுடன் அறிக்கை வெளியிடவில்லை. லாட்டரி சீட்டுகளை கொண்டு வரவில்லை என்றால் நன்மைதான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

டெல்லிக்கு சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, " அதிமுகவில் இருந்து தொண்டர்கள் விலகி செல்வது அவர்களின் விருப்பம். அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். யார் சென்றாலும் எங்களின் மக்கள் பணி தொடரும். அதிமுகவுக்கு அதே பலம் அப்படியே இருக்கிறது.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி தொடரும். அதுவே எங்களின் இலட்சியம். எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் லாட்டரி சீட்டு கொண்டு வருவதாக தெரியவந்ததால் அறிக்கை விடுத்தேன்.

நான் கற்பனையுடன் அறிக்கை விட்டதாக திமுக தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் கற்பனையுடன் அறிக்கை வெளியிடவில்லை. லாட்டரி சீட்டுகளை கொண்டு வரவில்லை என்றால் நன்மையே. பிற மத்திய அமைச்சர்களை சந்திக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. வாய்ப்பு கிடைத்தால் மத்திய அமைச்சர்களை சந்தித்து, அவர்களிடமும் தமிழகத்திற்கான கோரிக்கை வைக்கப்படும் " என்று தெரிவித்தார்.