Advertisement Contact

கனேடிய விவசாயிகளுக்கு பெரும் இடர்பாடாக உள்ள வெட்டுக்கிளிகள்

ஒரு பக்கம் காட்டுத்தீ அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் கனேடிய விவசாயிகளுக்கு பெரும் இடர்பாடுகளை வெட்டுக்கிளிகள் கொடுத்து வருகின்றன.

ஒருபக்கம் கனேடியர்கள் காட்டுத்தீ ஏற்படுத்திய இழப்பிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது. அது, பயிர்களை கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளிகள்.

குறிப்பாக, மனிடோபா விவசாயிகள் ஏற்கனவே வறட்சியுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 15 நகராட்சிகளில் உள்ள பயிர்களுக்கு வெட்டுக்கிளிகளால் ஆபத்து உருவாகியுள்ளது.

வறண்ட காலத்தில் பெருகும் சுமார் 85 வகை வெட்டுக்கிளிகள், புல், கோதுமை, பருப்புகள் ஆகிய பலவகை தானியவகை தாவரங்கள், எண்ணெய் வித்து தாவரங்கள் என ஒன்றையும் விடாமல் சாப்பிடக்கூடியவையாகும். இந்த வகை உணவு தாவரங்கள் கிடைக்காவிட்டால், என்ன தாவரம் பச்சையாக இருக்கிறதோ அதையும் ஒன்று விடாமல் காலி செய்துவிடும் இந்த வெட்டுக்கிளிகள்.

இந்த வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற போராடி வரும் விவசாயிகள் குறிப்பாக ஒரு விஷயத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். அது, மழை. வறண்ட சூழலில் முட்டையிட்டுப் பெருகும் வெட்டுக்கிளிகளிடமிருந்து தப்ப ஒரே வழி மழைதான். தொடர் மழை மட்டுமே இந்த வெட்டுக்கிளிகளை காணாமல் போகச் செய்யும்.