Advertisement Contact

67வது ஆண்டாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100அடியை எட்டி உள்ளது என்ற தகவலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,447 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 39,634கன அடியாக அதிகரித்தது.

நேற்று மழை சற்று தணிந்ததால் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,650கன அடியாக சற்று குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
 
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 88 ஆண்டு கால வரலாற்றில் 67வது ஆண்டாக நேற்று 100 அடியை எட்டியது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.