Advertisement Contact

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் குரங்குகள்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் ஊரடங்கால் உணவின்றி தவித்து வருகின்றன.

தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாராவாரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசிப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோவில் எதிரே அர்ச்சனைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், வளையல் கடைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கோவில் வளாகத்தில் இரவு தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக கோவில் வளாகம் எப்போதும் பக்தர்கள் நடமாட்டத்துடன் காணப்படும். கோவில் வளாக பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அவற்றிற்கு பக்தர்கள் உணவு கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா காரணமாக மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் வளாகம் தற்போது பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கோவில் பகுதியிலேயே இருக்கும் குரங்குகளுக்கு உணவு அளிக்கவும் ஆட்கள் இல்லை.

அதனால் குரங்குகள் அங்கும் இங்கும் உணவைத் தேடி அலைந்து திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது.